×

இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச்னை கபட நாடகமாடி மக்களை மோடி ஏமாற்ற முடியாது: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச்னை. பிரதமர் மோடி கபட நாடகம் ஆடி மக்களை ஏமாற்ற முடியாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலில் முதல், 2ம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தாலும் பிரதமர் மோடி ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை பேசி வருகிறார்.

நேற்று மும்பையில், நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார். 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு இடஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல என்பது தெரியாதா?. சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அந்தந்த மாநில அரசுகள் அமைக்கும் பின்தங்கியோர் ஆணையம் வழங்குகிற தரவுகளின்படி மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குகின்றன.

இந்த தேர்தல் இந்திய மக்களுக்கு வாழ்வா, சாவா பிரச்னை. இந்தியாவின் எதிர்காலமே நாடாளுமன்ற தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது. இந்தியாவில் சர்வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனில் பாஜவை தோற்கடிப்பது மிக மிக அவசியம் எனமக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. மோடி எத்தகைய கபட நாடகத்தை ஆடினாலும் கடந்த 2014, 2019ல் மக்கள் ஏமாந்ததைப் போல 2024ல் மக்களை ஏமாற்ற முடியாது.

The post இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச்னை கபட நாடகமாடி மக்களை மோடி ஏமாற்ற முடியாது: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Modi ,Selvaperundagai ,Chennai ,India ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthakai ,
× RELATED கருத்துகளை திரித்து பேசும் பிரதமர்...